Reserve Bank of India (RBI) புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இனி **₹3 கோடி** மற்றும் அதற்கு மேற்பட்ட பல்க் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் தினமும் காலை **10:10** மணிக்குள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையின்படி, அனைத்து வணிக வங்கிகளும் தங்களது ₹3 கோடி மற்றும் அதற்கு மேலான சிங்கிள் ரூபி டெர்ம் டெபாசிட்டுகளின் வட்டி விவரங்களை தினமும் காலை 10:00 மணி முதல் 10:10 மணிக்குள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்.
வெளிப்படைத்தன்மையே நோக்கம்
இதற்கு முன்பு வங்கிகள் தங்களுக்கு விருப்பமான வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட முறையில் வட்டி விகிதங்களை பேசி முடிவு செய்யும் சூழல் இருந்தது. இதனால் சந்தையில் வட்டி விகிதங்களில் தெளிவு இல்லாமல் இருந்தது. இப்போது இந்த நடைமுறையை மாற்றி, ஒரே மாதிரியான வைப்புத்தொகைக்கு வெளிப்படையான வட்டி விகிதத்தை அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.
வங்கிகளுக்கு என்ன லாபம்?
அதே சமயம், வங்கிகளுக்கு முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தங்களது லிக்விடிட்டி கவரேஜ் ரேஷியோ (LCR) அடிப்படையில் வட்டி விகிதங்களில் சிறிய மாறுதல்களை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் தங்களின் நிதி கையிருப்பையும், செயல்பாடுகளையும் சமநிலைப்படுத்த முடியும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
வங்கிகளின் இந்த 'அட்-ஹாக்' (Ad-hoc) பேரம் பேசும் சக்தி குறைய வாய்ப்புள்ளது. இதனால் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் (Net Interest Margin) பாதிக்கப்படலாம் என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். வங்கிகளின் கருவூலப் பிரிவுகள் (Treasury Desks) இந்த குறுகிய கால அவகாசத்திற்குள் தரவுகளை அப்டேட் செய்ய வேண்டிய கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாற்றம் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
