PB Fintech: FY26-ல் புதிய சரித்திரம்!
PolicyBazaar-ன் தாய் நிறுவனமான PB Fintech, நடப்பு நிதியாண்டான மார்ச் 2026-ல் மிகச் சிறந்த நிதி செயல்திறனை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டை விட 37% அதிகரித்து ₹6,794 கோடியாக எட்டியுள்ளது. இதற்குக் முக்கிய காரணம், காப்பீட்டு பிரீமியங்கள் 42% உயர்ந்து ₹29,934 கோடியாக பதிவானது.
இதை நாலு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது, FY22-ல் இந்நிறுவனம் ₹1,425 கோடி வருவாயில் ₹833 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்தது. ஆனால் இந்த முறை, வரிக்குப் பிந்தைய லாபம் (Profit After Tax) 115% உயர்ந்து ₹670 கோடியை எட்டியுள்ளது. மேலும், லாப வரம்புகள் (Profit Margins) கடந்த ஆண்டின் 6%-லிருந்து 10% ஆக விரிவடைந்துள்ளது. சரிசெய்யப்பட்ட ஈபிஐடிடிஏ (Adjusted EBITDA) 118% அதிகரித்து ₹725 கோடியானது.
பிரிவு வாரியான செயல்திறன்:
இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் பிரிவுதான், இந்நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக திகழ்கிறது. ஆன்லைன் காப்பீட்டு வணிகத்தின் பிரீமியங்கள் 39% வளர்ந்து ₹20,390 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக, உடல்நலம் மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ் போன்ற பாதுகாப்பு தயாரிப்புகளின் (Protection Products) பிரீமியங்கள் 57% என்ற அபார வளர்ச்சியைக் கண்டுள்ளன. புதிய வணிக முயற்சிகள் (New Business Initiatives) மூலமும் ₹9,544 கோடி பிரீமியங்கள் ஈட்டப்பட்டுள்ளது, இது 47% அதிகமாகும். மேலும், ஐக்கிய அரபு அமீரக (UAE) வணிகமும் FY26-ல் லாபம் ஈட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேர்மன் மற்றும் சிஇஓ-வின் பார்வை:
PB Fintech-ன் சேர்மன் மற்றும் சிஇஓ-வான யஷீஷ் தஹியா (Yashish Dahiya) கூறுகையில், 'புதிய முயற்சிகளில் எங்கள் தலைமைத்துவத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். FY26-ல் இந்த பிரிவுகளின் வருவாய் 43% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சரிசெய்யப்பட்ட ஈபிஐடிடிஏ (Adjusted EBITDA) வரம்புகள் எதிர்மறை 9%-லிருந்து எதிர்மறை 4% ஆக மேம்பட்டுள்ளன. புதிய வணிக முயற்சிகளில் 5% பங்களிப்பு வரம்பை (Contribution Margin) அடைந்துள்ளோம்' என்றார். மேலும், புதுப்பித்தல்கள் (Renewals) 63% ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துள்ளது, இது வாடிக்கையாளர் தக்கவைப்பையும் எதிர்கால லாபத்தையும் குறிக்கிறது.
