லாபம் இரட்டிப்பானதற்கான காரணங்கள்!
இந்த காலாண்டில் (Q3) Muthoot Finance-ன் தனிநபர் நிகர லாபம் (Standalone Net Profit) சுமார் 100% அதிகரித்து ₹2,656 கோடி-யை எட்டியுள்ளது. இதற்குக் முக்கிய காரணம், வட்டி வருவாய் (Interest Income) 63% உயர்ந்து ₹7,114 கோடி-யாக ஆனதுதான். இதனால், கம்பெனியின் மொத்த வருவாய் (Total Revenue) 64% அதிகரித்து ₹7,243 கோடி-யாக பதிவாகியுள்ளது.
ஆல்-டைம் ஹை AUM & கணிப்பு உயர்வு!
Muthoot Finance-ன் மொத்த கடன் சொத்து மேலாண்மை (Assets Under Management - AUM) இந்த 9 மாத காலத்தில் ₹1.48 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 51% அதிகமாகும். குறிப்பாக, தங்க நகை கடன் (Gold Loan) AUM மட்டும் இந்த காலாண்டில் ₹14,740 கோடி உயர்ந்து, 12% வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த அதீத வளர்ச்சியால், இந்த நிதியாண்டின் (FY26) கடன் வளர்ச்சி கணிப்பை (Loan Growth Guidance) 30-35% லிருந்து 45% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
தங்க கடன்களுக்கு ஏன் மவுசு?
Muthoot Finance நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் Muthoot கூறுகையில், தனிநபர் கடன்களுக்கு (Unsecured Personal Loans) வங்கிகள் கடன் கொடுப்பதைக் குறைத்துள்ளன. மைக்ரோஃபைனான்ஸ் துறையில் சில சிக்கல்கள் நீடிப்பது, சிறு வணிகங்களுக்குக் கடன் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் போன்ற காரணங்களால் மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து எளிதாகக் கடன் பெறுவதை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) பெரிய தங்க நகை NBFC-க்களின் கிளை விரிவாக்கத்திற்கு முன்பு இருந்த அனுமதியை ரத்து செய்துள்ளதும் ஒரு நல்ல செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற நிறுவனங்களின் செயல்பாடு
Muthoot Homefin, Belstar Microfinance, Muthoot Insurance Brokers போன்ற துணை நிறுவனங்கள் (Subsidiaries) உட்பட, மொத்த கடன் AUM ₹1.65 லட்சம் கோடி-யாக உள்ளது. Belstar Microfinance நிறுவனம் முந்தைய காலாண்டுகளின் இழப்புகளைச் சரிசெய்து, ₹51 கோடி லாபம் ஈட்டியுள்ளது. Muthoot Money நிறுவனமும் தனது கடன் தொகுப்பை (Loan Portfolio) ₹8,003 கோடி-க்கு மூன்று மடங்காக உயர்த்தி சிறப்பான செயல்பாட்டைக் காட்டியுள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில், Muthoot Finance பங்குகள் பங்குச் சந்தையில் 3% உயர்ந்து ₹4,070 ஆக வர்த்தகமானது.