இந்திய காப்பீட்டு சந்தை வளர்ந்து வரும் வேளையில், குறைந்த பிரீமியத்தை தேடித் செல்லும் வாடிக்கையாளர்கள் தவறான பாலிசிகளை வாங்கும் 'Misbuying' சிக்கல் பூதாகரமாகியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.
இந்திய காப்பீட்டுத் துறையில் நீண்ட காலமாக 'Misselling' (தவறான விற்பனை) பற்றியே பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால், தற்போது அதைவிட ஆபத்தான 'Misbuying' என்னும் புதிய சவால் உருவெடுத்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான கவரேஜை விட, மிகக் குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் பாலிசிகளைத் தாங்களாகவே தேடி வாங்கி மாட்டிக்கொள்வதுதான் இந்த பிரச்சினை.
விலைப்போர் உருவாக்கும் சிக்கல்
தற்போது சந்தையில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடும் போட்டியால், பிரீமியத்தை குறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த 'ரேஸ் டூ த பாட்டம்' (Race to the bottom) உத்தியால், பாலிசியின் விலை குறைகிறதே தவிர, அதில் உள்ள மறைமுகக் கட்டுப்பாடுகள் மற்றும் கவரேஜ் குறைபாடுகள் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய தலைவலியாக முடிகிறது. அவசர நேரத்தில் கிளைம் செய்யும்போதுதான், பல பாலிசிகள் பயனற்றதாக இருப்பது தெரியவருகிறது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வெறும் பிரீமியம் வசூலை மட்டும் பார்த்து முதலீடு செய்வது இப்போது பாதுகாப்பானதல்ல. எந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் பாலிசிகளை வடிவமைக்கின்றன, எவை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகின்றன என்பதை ஆராய்வது அவசியம். வெறும் விற்பனை எண்ணிக்கையை மட்டும் நம்பி இருக்கும் நிறுவனங்களை விட, வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களே நீண்ட கால அடிப்படையில் லாபகரமாக இருக்கும்.
IRDAI-ன் புதிய பார்வை
இந்த கட்டமைப்பு சிக்கல்களை சரிசெய்ய IRDAI அமைப்பு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில், வெறும் நடைமுறைச் சட்டங்கள் மட்டும் போதாது, வாடிக்கையாளர்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் புதிய சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் வெறும் பாலிசி விற்பனையாளராக இல்லாமல், உண்மையான 'ரிஸ்க் அட்வைசராக' மாறுவதுதான் அந்த நிறுவனத்தின் எதிர்கால வெற்றிக்கு முக்கிய காரணியாக இருக்கும்.
