இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையான UPI, தற்போது Uzbekistan நாட்டிலும் அறிமுகமாகிறது. இதற்காக NPCI International மற்றும் அந்நாட்டு வங்கியின் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. NPCI-ன் சர்வதேச பிரிவான NIPL, Uzbekistan-ன் National Interbank Processing Centre உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் 10-வது நாடாக Uzbekistan தனது டிஜிட்டல் கட்டண கட்டமைப்பில் UPI-ஐ இணைத்துள்ளது.
பயணிகளுக்கு என்ன பலன்?
இனி உஸ்பெகிஸ்தான் செல்லும் இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள், UPI-ஐப் பயன்படுத்தி அங்குள்ள UZQR கோடுகளை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். இதற்காக அந்நாட்டின் மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற HUMO கட்டண நெட்வொர்க் பயன்படுத்தப்பட உள்ளது. இது ரொக்கப் பணம் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டைத் தவிர்த்து, கரன்சி மாற்றும் சிக்கலையும், கட்டணச் சுமையையும் பெருமளவு குறைக்கும்.
பொருளாதார இலக்கு மற்றும் சவால்கள்
இரு நாடுகளும் 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு $5 பில்லியன் டாலர் அளவுக்கு இருதரப்பு வர்த்தகத்தை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த டிஜிட்டல் இணைப்பு வர்த்தகத்தை எளிதாக்க உதவும். இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக இந்த வசதி முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர ஓராண்டு வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, KYC விதிமுறைகள், பணமோசடி தடுப்பு சட்டங்கள் (AML) மற்றும் தரவு பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்திய தொழில்நுட்பத்தின் உலகளாவிய வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய சான்றாகப் பார்க்கப்படுகிறது.
