இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு செப்டம்பர் மாதத்தில் **5.9%** சரிந்து **₹2.04 லட்சம் கோடி**யாக குறைந்துள்ளது. 2021 பிப்ரவரிக்கு பிறகு பதிவாகும் முதல் சரிவு இதுவாகும். பண்டிகை கால ஷாப்பிங் அக்டோபருக்கு தள்ளிப்போனதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
2021 பிப்ரவரிக்குப் பிறகு, இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் முதல்முறையாக வருடாந்திர சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, செப்டம்பர் மாத மொத்த செலவீனம் 5.9% குறைந்து ₹2.04 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு பண்டிகைக்கால விற்பனை மற்றும் சலுகைகள் செப்டம்பரிலேயே தொடங்கியதால், இந்த ஆண்டுக்கான தரவுகளில் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் தெரிகிறது. பெரும்பாலான பண்டிகைக்கால ஷாப்பிங் அக்டோபர் மாதத்திற்குத் தள்ளிப்போனதே இந்த சரிவுக்கு முக்கிய காரணம்.
மாறத்துவங்கிய பணப்பரிவர்த்தனை முறை
பயன்பாட்டு முறையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கார்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 23.2% அதிகரித்து 61 கோடியாக உயர்ந்துள்ளது, ஆனால் ஒரு பரிவர்த்தனைக்கான சராசரி மதிப்பு 23.6% குறைந்து ₹3,343 ஆக உள்ளது. மக்கள் பெரிய பொருட்களுக்குச் செலவிடுவதை விட, அன்றாட சிறிய செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கிரெடிட் கார்டுகள் UPI உடன் இணைக்கப்பட்டதே ஆகும். ஆன்லைன் செலவுகள் 12.5% குறைந்து ₹1.26 லட்சம் கோடியாக இருந்த நிலையில், பாயிண்ட்-ஆஃப்-சேல் (POS) பரிவர்த்தனைகள் 7.2% வளர்ச்சி கண்டுள்ளன.
வங்கி சந்தை பங்கு (Market Share)
தனியார் துறை வங்கிகள் தங்கள் சந்தைப் பங்கை 73.78% ஆக உயர்த்தியுள்ளன. இதில் HDFC Bank தனித்து முன்னிலை பெற்று, தனது பங்கை 165 பேசிஸ் புள்ளிகள் அதிகரித்து 31.94% ஆக உயர்த்தி அசத்தியுள்ளது. அதே நேரத்தில், ICICI Bank, Axis Bank மற்றும் SBI Cards ஆகியவற்றின் சந்தை பங்கு சற்று குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் தங்களது RuPay கார்டுகள் மூலம் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தரவுகள் இந்த வீழ்ச்சியை ஈடுசெய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். CareEdge Ratings கணிப்புப்படி, வரும் பண்டிகை காலத்தில் செலவீனம் ₹2.28 லட்சம் கோடி முதல் ₹2.38 லட்சம் கோடி வரை உயர வாய்ப்புள்ளது.
