வெளிநாட்டில் வேலை பார்க்கும் NRIs-களின் சம்பளம் NRE கணக்கிற்கு வந்தால் அது இந்தியாவிற்குள் தானாகவே வரியின் கீழ் வராது என ITAT Bangalore தீர்ப்பளித்துள்ளது. Tax Residency Certificate (TRC) இல்லை என்ற ஒரே காரணத்திற்காக வருமான வரித்துறை ஆதாரங்களை நிராகரிக்க முடியாது என்பது இந்த வழக்கின் முக்கிய அம்சம்.
வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு (NRIs) வருமான வரி தொடர்பாக ஒரு முக்கிய சட்டப்பூர்வ நிவாரணத்தை பெங்களூருவின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) வழங்கியுள்ளது. செப்டம்பர் 23, 2026 அன்று அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு, வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை உள்நாட்டு வருமானமாக கருதி வரி விதிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கையை செல்லாது என அறிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி
தென் கொரியாவில் பணியாற்றிய ஒரு NRI, தனது சம்பளத்தை நேரடியாக இந்தியாவிலுள்ள தனது NRE கணக்கிற்கு டாலர் வடிவில் பெற்றார். அவரிடம் Tax Residency Certificate (TRC) அல்லது வெளிநாட்டு வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்றிதழ் இல்லாத காரணத்தால், அந்த வருமானத்தை உள்நாட்டு வருமானமாக கருதி வருமான வரித்துறை வரி விதித்திருந்தது. இதனை எதிர்த்துதான் இந்த வழக்கு தொடரப்பட்டது.
தீர்ப்பின் முக்கியத்துவம்
வருமான வரி கணக்கீடுகள் என்பது வெறும் நிர்வாக ஆவணங்களை மட்டும் வைத்து இருக்கக்கூடாது என்றும், தனிநபர் உண்மையில் எங்கிருக்கிறார் (Residential Status) என்பதே முக்கியம் என்றும் ITAT தெளிவுபடுத்தியுள்ளது. பாஸ்போர்ட்டில் உள்ள நுழைவு/வெளியேற்ற முத்திரைகள், வங்கி அறிக்கைகள் மற்றும் வேலை ஒப்பந்தங்கள் (Employment Contracts) ஆகியவையே போதுமான ஆதாரங்கள் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.
NRE கணக்கிற்கு பணம் வந்தது என்பதற்காகவே அதை இந்திய வருமானமாக கருத முடியாது. TRC இல்லை என்பதால் மட்டுமே ஒருவரது வெளிநாட்டு வருமானம் வரிக்கு உட்பட்டதாக மாறாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
இந்த வழக்கு மீண்டும் மதிப்பாய்வு (Remand) செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, வருமான வரித்துறை சரியான ஆதாரங்களை கொண்டு மீண்டும் ஒருமுறை மறுஆய்வு செய்யும். இது அனைத்து NRIs-களுக்கும் பொதுவான வரி விலக்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
NRIs-கள் தங்களின் வேலை ஒப்பந்தங்கள், சம்பள சீட்டுகள் மற்றும் பாஸ்போர்ட் பயண விவரங்களை முறையாக பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியம். எதிர்காலத்தில் வரி சர்ச்சைகளை தவிர்க்க இந்த ஆவணங்கள் மிக முக்கியமான 'ஆதாரங்களாக' செயல்படும்.
