UPI பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் விதிக்க வழிவகை செய்யும் வகையில், மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இது உடனடி அமலுக்கு வராது என்றாலும், எதிர்காலத்தில் பெரிய அளவிலான வியாபார பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
UPI பரிவர்த்தனைகள் இனி இலவசம் இல்லை?
மத்திய அரசு, 'பேமெண்ட் அண்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் ஆக்ட்' (Payment and Settlement Systems Act) சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, UPI பரிவர்த்தனைகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி UPI மூலம் நடக்கும் வியாபார பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) எனப்படும் ஒருவகையான கட்டணத்தை வசூலிக்க அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.
இது உடனடி அமலாகுமா?
மக்களே, இதைக் கேட்டு பயந்துவிட வேண்டாம். இந்த சட்ட திருத்தம் என்பது எதிர்காலத்தில் கட்டணம் விதிக்க ஒரு வாய்ப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. இது உடனடி அமலுக்கு வராது. அரசு தரப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்னவென்றால், நுகர்வோருக்கும், சிறு வியாபாரிகளுக்கும் UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். முக்கியமாக, பெரிய அளவிலான வியாபார பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எதிர்காலத்தில் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏன் இந்த சட்ட திருத்தம்?
கடந்த 6 ஆண்டுகளாக UPI கட்டணமின்றி செயல்பட்டு வந்தது. ஆனால், UPI சேவையின் உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு, மோசடி தடுப்பு போன்றவற்றுக்கு ஆகும் செலவுகள் மிக அதிகம். இந்த செலவுகள் ₹20,700 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. இந்த செலவுகளை சமாளிக்க, வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு நிதிச்சுமை அதிகமாகிறது. எனவே, பெரிய வியாபார பரிவர்த்தனைகளுக்கு மட்டும் ஒரு சிறிய கட்டணம் (0.3% முதல் 0.5% வரை) விதிக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. முக்கியமாக, ₹2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் மட்டுமே இது பொருந்தும் என கூறப்படுகிறது.
சாமானியர்களுக்கு பாதிப்பு இல்லை!
புள்ளிவிவரங்களின்படி, பெரும்பாலான UPI பரிவர்த்தனைகள் தனிநபர்களுக்கு இடையேயானவை (P2P) மற்றும் ₹2,000-க்கும் குறைவான தொகையில் நடப்பவை. இதில் வெறும் 4% பரிவர்த்தனைகள் மட்டுமே ₹2,000-க்கு மேல் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த புதிய கட்டண முறை சாமானிய மக்களின் அன்றாட UPI பயன்பாட்டை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. NPCI (National Payments Corporation of India) மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்கள் இதன் அமலாக்க காலக்கெடு மற்றும் விதிமுறைகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
