EPFO-வின் முதலீட்டுக் குழு, டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே டெவலப்மென்ட் லிமிடெட் (DMEDL) வெளியிட்டுள்ள ₹1,250 கோடி மதிப்புள்ள Non-Convertible Debentures (NCDs)-ன் Buyback திட்டத்தில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை, EPFO-வின் வருங்கால வைப்பு நிதிக்கு (PF) கிடைக்கும் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.
தற்போது, இந்த NCD-க்களில் இருந்து EPFO-க்கு ஆண்டுக்கு 7.97% என்ற வட்டி வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த Buyback திட்டத்தில் பங்கேற்று, பணத்தை வேறு திட்டங்களில் முதலீடு செய்தால், புதிய முதலீடுகளிலிருந்து 7.6% வட்டி மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 0.37% (30 basis points) என்ற சிறிய வட்டி விகித வித்தியாசம் கூட, EPFO-வின் மொத்தம் ₹15.41 லட்சம் கோடி சொத்து மதிப்பில், ஆண்டிற்கு கணிசமான தொகையை இழப்பாக மாற்றும்.
இறுதி முடிவை எடுக்கும் மத்திய அறங்காவலர் குழு (CBT), வரும் திங்கட்கிழமை கூடுகிறது. இந்த கூட்டத்தில் NCD Buyback-ஐ அங்கீகரிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வதோடு, EPFO-வின் 30 கோடி உறுப்பினர்களுக்கு இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தையும் அறிவிக்க உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், EPFO உறுப்பினர்களுக்கு சராசரியாக 8.10% முதல் 8.15% வரை வட்டி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது கடன் சந்தையில் புதிய முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் 7.15% முதல் 7.25% வரை மட்டுமே உள்ளதால், உறுப்பினர்களுக்கு வழக்கமான உயர் வட்டி விகிதத்தை வழங்குவது CBT-க்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
DMEDL நிறுவனம், இந்த Buyback-க்காக ஒரு பாண்டிற்கு ₹1.03 லட்சம் என விலை நிர்ணயித்துள்ளது. இது முந்தைய கட்டங்களில் வழங்கப்பட்ட ₹1.05 லட்சம் என்ற விலையை விட குறைவு. 'AAA' போன்ற உயர் கடன் மதிப்பீடு கொண்ட NCD-க்களில் EPFO முதலீடு செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது.
EPFO-வின் முதலீட்டு மூலோபாயத்தையும், உறுப்பினர்களின் வட்டி எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்துவதில் CBT-யின் இந்த முடிவு முக்கிய பங்கு வகிக்கும்.