ஹரியானா அரசு நிதி முறைகேடு வழக்கில், CBI தனது மூன்றாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் IAS அதிகாரிகள் உட்பட மேலும் 19 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ₹504 கோடி அரசு நிதி முறைகேடு வழக்கில், CBI பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றத்தில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் சிக்கியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய இந்த பட்டியலில் 6 மூத்த IAS அதிகாரிகள், 9 அரசு ஊழியர்கள், IDFC First Bank-ன் 3 அதிகாரிகள் மற்றும் AU Small Finance Bank-ன் ஒரு அதிகாரி என மொத்தம் 19 புதிய நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மோசடி எப்படி நடந்தது?
விசாரணை அமைப்புகளின் தகவல்படி, ஹரியானா பள்ளி சிக்ஷா பரிஜோஜனா பரிஷத் மற்றும் பஞ்சாயத்துத் துறைக்குச் சொந்தமான அரசு நிதிகள், முறையான அனுமதியின்றி குறிப்பிட்ட வங்கி கிளைகளில் இருந்த கணக்குகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த பணத்தைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட நபர்கள் அதை பல்வேறு போலி நிறுவனங்கள் வழியாகப் பரிமாற்றம் செய்து, இறுதியில் பணமாக (Cash) மாற்றியதாக CBI குற்றம் சாட்டுகிறது.
வங்கிகளின் நிலை என்ன?
முதலீட்டாளர்களின் பார்வையில், இந்த விவகாரம் முக்கியமானது. IDFC First Bank ஏற்கனவே இந்த மோசடி தொடர்பான பாதிப்புகளைச் சரிசெய்துவிட்டது. பாதிக்கப்பட்ட அரசுத் துறைகளுக்கு, அசல் மற்றும் வட்டி என சுமார் ₹583 கோடி தொகையை வங்கி முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசு நிதியை கையாடல் செய்த வழக்கில் வங்கி அதிகாரிகள் சிக்கியிருப்பது, எதிர்காலத்தில் வங்கிச் செயல்பாடுகள் மற்றும் உள்நாட்டு தணிக்கை (Internal Audit) முறைகள் மீது ரெகுலேட்டர்களின் பார்வையைத் தீவிரப்படுத்தலாம். இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பங்குச் சந்தையில் தொடர்புடைய வங்கிகளின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், மேனேஜ்மெண்ட் தரப்பிலிருந்து வரும் அப்டேட்களைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.
