இன்சூரன்ஸ் விற்பனையில் தரகர்களின் பங்கு
Praxis Global Alliance வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மோட்டார் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் விற்பனையில் தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் பங்கு 80% ஆக உள்ளது. டிஜிட்டல் தளங்கள் வளர்ந்து வந்தாலும், சிக்கலான பாலிசிகள் மற்றும் க்ளைம்களை சமாளிக்க கடினமாக இருப்பதால் மக்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளையே அதிகம் சார்ந்துள்ளனர்.
நுகர்வோர் ஏன் தரகர்களை நாடுகிறார்கள்?
83% நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தயாரிப்புகள் சிக்கலாக இருப்பதாக Praxis தரவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் (2/3 பங்கு) சரியான பாலிசிகளைத் தேர்வு செய்ய ஏஜெண்டுகளின் உதவியை நாடுகின்றனர். மேலும், திட்ட விருப்பங்களைப் புரிந்துகொள்ள 50% பேர் ஏஜெண்டுகளை நாடுகிறார்கள். நம்பகத்தன்மை, சிறந்த விலை மற்றும் சிறப்பான சேவை போன்ற காரணங்களாலும் வாடிக்கையாளர்கள் தரகர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றனர்.
சேவை குறைபாடுகள்
வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதற்கும், அவர்கள் பெறும் சேவைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கியவர்களில் 35% பேரும், ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கியவர்களில் 28% பேரும் மட்டுமே வாங்கும்போதும், க்ளைம் செய்யும்போதும் தங்கள் எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதாக உணர்கின்றனர். தெளிவான விளக்கங்கள் மற்றும் க்ளைம் சமயத்தில் போதிய ஆதரவு இல்லாததை இது காட்டுகிறது.
வாடிக்கையாளர் விசுவாசம் மற்றும் தொடர் விற்பனை
வாடிக்கையாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களை விட தங்கள் ஏஜெண்டுகளுடன் அதிக நெருக்கத்தை உணர்கின்றனர். சுமார் 40-50% வாடிக்கையாளர்கள் ஒரே ஏஜெண்டிடம் பல நிதித் தயாரிப்புகளை வாங்குகின்றனர். இது ஏஜெண்டுகள் மேலும் பல பாலிசிகளை விற்க உதவுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர் வெளியேற்றத்தை (Customer Churn) சந்திக்கின்றன. ரீடெய்ல் மோட்டார் இன்சூரன்ஸில் 35-45% வாடிக்கையாளர்கள் வெளியேறுகின்றனர், ஹெல்த் இன்சூரன்ஸில் முதல் சில ஆண்டுகளில் 25% மேல் வெளியேறுகின்றனர். பல பாலிசிதாரர்கள் தங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரைக் கூட கூறமுடியவில்லை, இது ஏஜெண்டின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.
வாடிக்கையாளர் அதிருப்திக்கான முக்கிய காரணங்கள்
சிக்கலான பாலிசி விதிமுறைகளைப் புரிந்துகொள்ளாததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தி அடைகின்றனர். 50% க்கும் அதிகமான க்ளைம் கோரிக்கையாளர்களுக்கு முழு க்ளைம் தொகை கிடைக்கவில்லை. மேலும், 40% வாடிக்கையாளர்கள் க்ளைம் செட்டில்மென்ட் செய்வதில் தாமதம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததை அனுபவித்துள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாகவும் 60% பேர் தெரிவித்துள்ளனர்.
