வங்கி கணக்கில் ஒருவரை நாமினியாக நியமிப்பது பணத்தை பெறுவதை எளிதாக்கும், ஆனால் அது சட்டப்பூர்வமான சொத்துரிமையைத் தராது. 2026-ன் புதிய வங்கி விதிகளின்படி நாமினிகளின் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
பலர் வங்கி கணக்கில் நாமினி பெயரைச் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு அந்தப் பணம் முழுமையாகச் சொந்தமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், சட்டப்படி வங்கி நாமினேஷன் என்பது ஒரு நிர்வாக நடைமுறை மட்டுமே (Administrative Tool). வங்கித் தரப்பில், கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு பணத்தை ஒப்படைப்பதற்கான ஒரு நபரை வைத்திருப்பதே நாமினேஷன் ஆகும்.
நாமினி என்பவர் யார்?
சட்டப்படி, ஒரு நாமினி என்பவர் பணத்தை எடுத்துத் தரும் ஒரு 'டிரஸ்டி' (Trustee) அல்லது 'கஸ்டோடியன்' மட்டுமே. சுப்ரீம் கோர்ட் அளித்த 'Shakti Yezdani' தீர்ப்பின்படி, நாமினி என்பவர் பணத்தைப் பெறும் தற்காலிக உரிமையாளர் மட்டுமே, இறுதி உரிமையாளர் அல்ல. அவர் அந்தப் பணத்தை வாரிசுதாரர்களுக்கு (Legal Heirs) பிரித்து வழங்க கடமைப்பட்டவர்.
2026-ன் புதிய வங்கி விதிகள்
Banking Laws Amendment Act 2025-ன் கீழ், 2026-ல் சில முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன:
- இனி ஒரு கணக்கில் 4 நாமினிகளை நியமிக்கலாம்.
- ஒரே நேரத்தில் அல்லது வரிசைக்கிரமமாக (Simultaneous/Successive) நாமினிகளைத் தேர்வு செய்யலாம்.
- ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வங்கி பணத்தை செட்டில் (Settle) செய்ய வேண்டும்.
இந்த மாற்றங்கள் பணத்தை எடுக்கும் நேரத்தைக் குறைக்குமே தவிர, நாமினியின் சட்டப்பூர்வ அந்தஸ்தை மாற்றாது.
ஏன் உயில் (Will) முக்கியம்?
நாமினேஷன் இருப்பதால் வாரிசு சான்றிதழ் போன்ற சிக்கல்கள் குறையலாம், ஆனால் குடும்பத்திற்குள் தகராறு வரும்போது நாமினேஷன் மட்டும் போதாது. உயில் இல்லாத பட்சத்தில், சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கோரினால் நாமினி பணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் (Life Insurance) 'Beneficial Nominee' முறை இருந்தாலும், வங்கிக் கணக்குகளில் இந்த வேறுபாடு மிகத் தெளிவாக உள்ளது.
உங்கள் குடும்பத்தினருக்குப் பின்னாளில் எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க, வங்கியின் நாமினேஷன் தகவல்களை ஒரு சரியான உயில் ஆவணத்துடன் இணைத்து வைத்திருப்பதே சிறந்தது.
