சந்தேகத்திற்குரிய UPI பரிவர்த்தனைகளால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், பதற்றமடைய வேண்டாம். சட்ட ரீதியான காரணங்களை புரிந்து கொண்டு, வங்கி மற்றும் அதிகாரிகளுடன் முறையாகத் தொடர்புகொண்டு உங்கள் கணக்கை மீட்டெடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
UPI மூலம் பணம் அனுப்பும்போது அல்லது பெறும்போது திடீரென உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அது தனிநபர் மற்றும் தொழில்முறை பணப்பரிமாற்றங்களை முழுமையாகப் பாதிக்கும். இது போன்ற சூழலில், வங்கி உங்களைக் குற்றவாளி எனக் கருதுவதாக அர்த்தமல்ல; மாறாக, இது பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கலாம்.
முடக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
பெரும்பாலும் சைபர் கிரைம் (Cyber Cell) அல்லது வங்கிகள், ஒரு கணக்கை 'Money Mule' சங்கிலியில் சிக்கியதாகக் கருதி முடக்குகின்றன. முதலில், இது உங்கள் தவறான கடவுச்சொல் (PIN) உள்ளீட்டால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா அல்லது சட்ட ரீதியான விசாரணையா என்பதை உறுதிப்படுத்தவும். PIN கோளாறு என்றால், மொபைல் ஆப் அல்லது ஏடிஎம் மூலம் எளிதாகச் சரிசெய்துவிடலாம். ஆனால், விசாரணையில் இருக்கும் கணக்கு என்றால், உடனடியாக வங்கி கிளையை அணுகி Complaint Reference Number மற்றும் விசாரணை அதிகாரியின் விவரங்களைப் பெற வேண்டும்.
ஆதாரங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது?
உங்கள் கணக்கை விரைவில் மீட்க, பணப் பரிமாற்றத்திற்கான முறையான ஆதாரங்களை வைத்திருப்பது அவசியம். இதற்கு கீழ்க்கண்டவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்கவும்:
- வணிக ரசீதுகள் (Invoices)
- ஆர்டர் உறுதிப்படுத்தல் சான்றுகள்
- பணத்தை அனுப்பியவருடன் நடந்த உரையாடல் (Chat logs)
- சரியான UPI பரிவர்த்தனை ஐடி (Transaction IDs)
இவற்றை வங்கி அதிகாரிகளிடம் அல்லது விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிப்பது உங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க உதவும்.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள்
மோசடி செய்பவர்கள், தங்களுக்குத் தவறுதலாகப் பணம் சென்றுவிட்டதாகக் கூறி, வேறொரு UPI ஐடிக்கு பணத்தை திருப்பி அனுப்பச் சொல்லி உங்களை வற்புறுத்தலாம். இது போன்ற பொறிகளில் சிக்க வேண்டாம். மேலும், பணத்தைக் கொடுத்து கணக்கை அன்-ப்ரீஸ் (Unfreeze) செய்து தருவதாகக் கூறும் மூன்றாம் நபர் சேவைகளை முற்றிலும் தவிர்க்கவும். இவை பண மோசடிகளாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
எங்கு புகார் அளிக்கலாம்?
வங்கியிடம் முறையான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அந்த வங்கியின் Grievance Redressal முறையைப் பயன்படுத்தவும். அங்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், Reserve Bank of India (RBI)-ன் ஒருங்கிணைந்த ஒம்புட்ஸ்மேன் (Integrated Ombudsman) அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்து வைப்பது மிக முக்கியம்.
