இந்தியாவில் Apple Pay தனது கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் சேவையை அக்டோபர் 2026-க்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் UPI-க்கு பதிலாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. Visa மற்றும் Mastercard நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, இன்டர்சேஞ்ச் கட்டணம் (Interchange fees) மூலம் வருவாய் ஈட்ட Apple காய் நகர்த்தி வருகிறது.
இந்தியா வரும் Apple Pay, தனது சேவையை கிரெடிட் கார்டு சந்தையில் மட்டுமே கவனத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் iPhone மற்றும் Apple Watch பயனர்கள் 'டேப்-டு-பே' (Tap-to-Pay) முறையில் Visa மற்றும் Mastercard கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். இந்தியாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த UPI முறையைத் தவிர்த்து, Apple இந்த முடிவை எடுத்துள்ளது சந்தை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்திற்கான கணக்கு (Business Strategy)
இந்தியாவில் UPI பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் வணிகர்கள் வங்கிகளுக்குச் செலுத்தும் இன்டர்சேஞ்ச் கட்டணம் (Interchange fees) மூலம் வருவாய் ஈட்ட Apple திட்டமிடுகிறது. ஒரு பரிவர்த்தனைக்கு சுமார் 15 முதல் 20 பேசிஸ் பாயிண்டுகள் (basis points) கமிஷனாகப் பெற Apple பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வங்கித் துறையின் நிலைப்பாடு
இந்தத் திட்டத்திற்காக HDFC Bank, ICICI Bank மற்றும் Axis Bank ஆகிய முன்னணி வங்கிகளுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்பிள் போன்ற ஒரு பெரிய பிராண்டுடன் இணைவது பிரீமியம் வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும் என்றாலும், இன்டர்சேஞ்ச் கட்டணத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பது வங்கிகளின் லாபத்தை லேசாகப் பாதிக்கும். இந்த கட்டணக் கட்டமைப்பு இறுதி செய்யப்படும் விதம், இந்த கூட்டணியின் நீண்டகால லாபத்தை தீர்மானிக்கும்.
சவால்கள் என்ன?
தற்போதைய PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு இது நேரடிப் போட்டியாக இருக்காது. ஏனெனில், Apple Pay பயன்பாட்டிற்கு NFC வசதி கொண்ட பாயிண்ட்-ஆஃப்-சேல் (PoS) இயந்திரங்கள் அவசியம். தற்போதைக்கு இவை பிரீமியம் கடைகளில் மட்டுமே இருப்பதால், சாதாரண கடைகளில் இதன் பயன்பாடு குறைவாகவே இருக்கும். மேலும், இந்திய ஒழுங்குமுறை ஆணையங்களின் (NPCI) பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார முறைகளை ஆப்பிள் எவ்வாறு கையாளப் போகிறது என்பதே தற்போதைய பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
