இயற்கை ரப்பர் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளதால், டயர் நிறுவனங்கள் வரியில்லா இறக்குமதிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது JK Tyre மற்றும் CEAT போன்ற நிறுவனங்களின் லாபத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இந்திய டயர் தயாரிப்புத் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இயற்கையான ரப்பரின் விலை கிலோ ஒன்றுக்கு ₹300 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62% அதிரடி உயர்வாகும். இதைக் கட்டுப்படுத்த, குறைந்த அளவிலான ஒதுக்கீட்டில் வரியில்லா இறக்குமதிக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய வர்த்தக அமைச்சகத்திடம், இந்திய டயர் தயாரிப்பாளர்கள் சங்கம் (ATMA) கோரிக்கை விடுத்துள்ளது.
லாபத்தில் எதிரொலிக்கும் விலை உயர்வு
இந்த மூலப்பொருள் விலை உயர்வால் JK Tyre மற்றும் CEAT போன்ற முன்னனி நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margin) கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. சந்தையில் நிலவும் கடும் போட்டியால், இந்த கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது முழுமையாக சுமத்த முடியாமல் நிறுவனங்களே நஷ்டத்தைச் சந்திக்கின்றன. கடந்த காலாண்டில் உள்ளீட்டுச் செலவுகள் 35% முதல் 40% வரை உயர்ந்த நிலையில், அதை ஈடுகட்ட நிறுவனங்கள் திணறி வருகின்றன.
தட்டுப்பாடும் தேவையும்
உள்நாட்டில் ரப்பர் உற்பத்தி 9.05 லட்சம் டன்களாக மட்டுமே இருக்கும் நிலையில், தேவை 14.27 லட்சம் டன்களாக உள்ளது. இந்த 37% பற்றாக்குறையைச் சமாளிக்க இறக்குமதியை நம்பியே ஆக வேண்டிய சூழல் உள்ளது. தற்போதுள்ள இறக்குமதி வரி விதிப்பு, ஏற்கெனவே விலை உயர்ந்த நிலையில் இருக்கும் ரப்பரை இன்னும் விலையுயர்ந்ததாக மாற்றுகிறது.
பொருளாதார சவால்கள்
இயற்கை ரப்பர் மட்டுமின்றி, செயற்கை ரப்பர், கார்பன் பிளாக் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகளும் அதிகரித்துள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 16% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், மூலப்பொருள் விலை இப்படியே நீடித்தால் ஏற்றுமதி வளர்ச்சியைத் தக்கவைப்பது கடினம் எனத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் இப்போது வர்த்தக அமைச்சகத்தின் முடிவை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அரசு சாதகமான முடிவை எடுத்தால் லாப வரம்பு சீராக வாய்ப்புள்ளது, இல்லையெனில் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.
