பெங்களூரைச் சேர்ந்த EV தயாரிப்பு நிறுவனமான Simple Energy, தனது சீரிஸ் சி (Series C) முதலீட்டுச் சுற்றில் ₹1,750 கோடியை திரட்டியுள்ளது. இந்த நிதியை உற்பத்தி விரிவாக்கத்திற்கும் சில்லறை விற்பனை மையங்களை அதிகரிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
முதலீட்டு விவரம்
இந்த சீரிஸ் சி முதலீட்டுச் சுற்றில், Thyrocare நிறுவனத்தின் நிறுவனர் Dr. Arokiaswamy Velumani-ன் குடும்ப அலுவலகம் முக்கிய பங்காற்றியுள்ளது. திரட்டப்பட்ட மொத்த தொகையில் சுமார் 80% இவர்களிடமிருந்தே வந்துள்ளது. இந்த நிதி மூலம் கம்பெனியை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உற்பத்தி மற்றும் விரிவாக்கத் திட்டம்
தற்போது Simple Energy மாதத்திற்கு 3,000 ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரித்து வருகிறது. ஆனால், இதன் உற்பத்தித் திறன் 10,000 யூனிட்களாக உள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் முழு உற்பத்தி திறனை எட்டவும், அடுத்த ஓராண்டில் மாதத்திற்கு 25,000 ஸ்கூட்டர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்காக இரண்டாவது தொழிற்சாலை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளில் (R&D) அதிக முதலீடு செய்யப்பட உள்ளது.
விற்பனை வலைப்பின்னல்
தற்போது இந்தியா முழுவதும் 60 நகரங்களில் 80 ஸ்டோர்களைக் கொண்டுள்ள நிறுவனம், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ஸ்டோர்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2028-ம் நிதியாண்டில் IPO கொண்டு வருவதற்கு முன்பாக, இந்த நிதி திரட்டலே இறுதி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தை சவால்
இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் TVS Motor Company, Bajaj Auto மற்றும் Ola Electric போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், Simple Energy தனது உற்பத்தி மற்றும் சேவைத் தரத்தை (Service Network) எந்த அளவுக்கு சிறப்பாகக் கையாளப் போகிறது என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
