இந்தியாவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக Rolls-Royce நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இளம் தொழிலதிபர்கள் மற்றும் எலக்ட்ரிக் மாடலான Spectre கார்களுக்கு இருக்கும் வரவேற்பே இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இந்திய சொகுசு கார் சந்தையில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. Rolls-Royce நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. முன்னதாக, பாரம்பரியமான பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, இன்று இளம் தலைமுறை தொழிலதிபர்களும், பிசினஸ் வாரிசுகளும் அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். இதன் விளைவாக, ஓட்டுநர்களின் சராசரி வயது 40-களின் தொடக்கத்தில் உள்ளது.
வளர்ச்சிக்கு என்ன காரணம்?
நிறுவனம் விற்பனை எண்ணிக்கையை மட்டும் குறிவைக்காமல், 'எக்ஸ்க்ளூசிவிட்டி' எனப்படும் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கார்களை கஸ்டமைஸ் (Bespoke) செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனுடன், நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான Spectre மாடல் இந்திய சந்தையில் செம்ம ஹிட் அடித்துள்ளது. அதன் அமைதியான செயல்பாடு மற்றும் உடனடி பிக்-அப் (Instant Torque) இளம் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பிரம்மாண்ட விலை மற்றும் காத்திருப்பு காலம்
இந்தியாவில் இந்த கார்களின் ஆரம்ப விலை ₹7 கோடி ஆகும். கஸ்டமைஸ் செய்யப்படும்போது இதன் விலை பல மடங்கு உயரும். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் இந்த கார்களை ஆர்டர் செய்தால், சாதாரண மாடல்களுக்கு குறைந்தபட்சம் 14 மாதங்கள் காத்திருக்க வேண்டும். மிகச் சிக்கலான கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்களுக்கு 3 ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.
தற்போது டெல்லி மற்றும் சென்னையில் ஷோரூம்களையும், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் தொழில்நுட்ப மையங்களையும் கொண்டுள்ள நிறுவனம், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை தனது அதிவேக வளர்ச்சிச் சந்தையாகக் கருதுகிறது.
