66-வது SIAM மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் Piyush Goyal, வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் அல்லது ஏற்றுமதியை உயர்த்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இறக்குமதி தரவுகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதால், இனி ஆட்டோ நிறுவனங்களின் செயல்பாட்டில் பெரிய மாற்றங்கள் வரலாம்.
66-வது SIAM வருடாந்திர மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் Piyush Goyal, ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தியாவில் பெயரளவில் மட்டும் உற்பத்தி செய்துவிட்டு, மற்ற உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
பெயரளவு லோக்கலைசேஷன் இனி செல்லாது!
பல நிறுவனங்கள் இந்தியாவில் வெறும் 10% முதல் 15% வரை மட்டுமே மதிப்புக்கூட்டல் (Value Addition) செய்துவிட்டு, அதை முழுமையான இந்திய தயாரிப்பு என்று கூறுகின்றன. இதை இனி அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களை மட்டும் அசெம்பிள் செய்யும் நிறுவனங்களின் Import Export Code (IEC) தரவுகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஏற்றுமதியை கூட்டுங்கள்!
உடனடியாக லோக்கலைசேஷன் செய்ய முடியாத நிறுவனங்களுக்கு அமைச்சர் ஒரு வழியையும் கூறியுள்ளார். இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர, இங்கிருந்து செய்யப்படும் ஏற்றுமதியை கணிசமாக உயர்த்த வேண்டும். நடப்பு ஆண்டில் $1 ட்ரில்லியன் ஏற்றுமதி இலக்கை அடைய ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த அரசின் அழுத்தம், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் செயல்பாட்டு உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட CKD (Completely Knocked Down) கிட்களை அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்கள், தங்கள் சப்ளை செயினை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இது குறுகிய காலத்தில் நிறுவனங்களின் லாப வரம்பில் (Profit Margin) அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எதிர்காலத்தில் அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்கள், இந்த லோக்கலைசேஷன் இலக்குகளை எவ்வளவு தூரம் நிறுவனங்கள் எட்டுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.
