லாபம் 120% உயர்வு - காரணம் என்ன?
MRF Ltd நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில், கம்பெனியின் நெட் ப்ராஃபிட் கடந்த ஆண்டை விட 120% அதிகரித்து ₹692 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ₹315 கோடியாக இருந்தது. மேலும், கம்பெனியின் வருவாய் (Revenue) 15% உயர்ந்து ₹8,050 கோடியாக எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு ₹7,000 கோடியாக இருந்தது.
விற்பனையைத் தூண்டிய காரணிகள்
இந்த அதிரடி வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக, ஒரிஜினல் எக்யூப்மெண்ட் (OE) மற்றும் ரீப்ளேஸ்மெண்ட் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் அதீத தேவை (Demand) சொல்லப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறைக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் டயர்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த தாக்கம் அடுத்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கிராமப்புற பொருளாதாரத்தில் (Rural Economy) ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியும், சாதகமான பருவ மழையும் கம்பெனியின் விற்பனையை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது. வாகன உற்பத்தியாளர்கள் (OEMs) வரும் காலாண்டில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர், ஏனெனில் கையிருப்பில் உள்ள ஸ்டாக் (Inventory) குறைந்துள்ளது.
அரசின் திட்டங்கள் & ஏற்றுமதி வாய்ப்புகள்
அரசு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (Infrastructure Spending) ஒதுக்கியுள்ள பட்ஜெட் தொகையும், குறிப்பாக வணிக வாகனப் பிரிவுக்கும் (Commercial Vehicle Segment), அதனால் டயர் துறைக்கும் நல்ல லாபம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐரோப்பிய யூனியன் (EU) மற்றும் அமெரிக்கா (US) போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் (Trade Agreements) கையெழுத்தாகும் பட்சத்தில், MRF-க்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் (Export Opportunities) பிரகாசமாக உள்ளன.
டிவிடெண்ட் அறிவிப்பு
இந்த சிறப்பான நிதிநிலை முடிவுகளைத் தொடர்ந்து, கம்பெனி பங்குதாரர்களுக்கு ₹3 இடைக்கால டிவிடெண்டாக (Interim Dividend) அறிவித்துள்ளது. இது நிதி ஆண்டின் இறுதிக்குள் (மார்ச் 31, 2026) வழங்கப்படும்.