எலக்ட்ரிக் மற்றும் டீசல் டிரக்குகளுக்கு இடையிலான விலை வித்தியாசத்தை குறைக்கும் நோக்கில், JSW Group புதிய ஃபைனான்ஸ் பிரிவை உருவாக்கியுள்ளது. SBI மற்றும் ICICI Bank உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் ஆதரவுடன், தனது சொந்த லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கை பயன்படுத்தி உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக விலை கொண்டவை என்பதுதான் இத்துறையின் மிகப்பெரிய சவால். உதாரணமாக, ஒரு டீசல் டிரக்கின் விலை சுமார் ₹25 லட்சம் என்றால், அதே எலக்ட்ரிக் டிரக்கின் விலை ₹88 லட்சம் வரை உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்கவே JSW Group இப்போது களத்தில் இறங்கியுள்ளது. வாகனத்தின் வாழ்நாள் செலவை (Total Cost of Ownership) கருத்தில் கொண்டால், டீசல் மாடல்களை விட 15% முதல் 20% வரை செலவு குறையும் என்று நிறுவனம் கணிக்கிறது.
வங்கிகளின் ஆதரவு
இந்த முயற்சியை வெற்றிபெற வைக்க, State Bank of India, ICICI Bank, HDFC Bank மற்றும் Canara Bank போன்ற முன்னணி வங்கிகளுடன் JSW கைகோர்த்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் வாகனங்களுக்கான 80:20 என்ற விகிதத்தில், இவர்களது எலக்ட்ரிக் டிரக்குகளுக்கும் கடன் வழங்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.
கேப்டிவ் டிமாண்ட் (Captive Demand) வியூகம்
JSW தனது சொந்த நிறுவனங்களான ஸ்டீல், சிமெண்ட் மற்றும் போர்ட்ஸ் பிசினஸில் ஏற்கனவே 17,000 டிரக்குகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த பிரம்மாண்டமான நெட்வொர்க்கிலேயே எலக்ட்ரிக் டிரக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆரம்பக்கட்ட செயல்பாட்டை எளிதாக்குகிறது. Greentech என்ற இந்த எலக்ட்ரிக் வாகன பிரிவு, ஆண்டுக்கு 3,000 முதல் 4,000 வாகனங்கள் உற்பத்தியாகும் போதே லாபத்தை (Break-even) எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி மேலாண்மை
பேட்டரி செலவை குறைக்க 'Battery-as-a-service', 'Wet leases' மற்றும் பேட்டரி-ஸ்வாப்பிங் தொழில்நுட்பங்களை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. முதல் 100 வாகனங்களுக்கு பேட்டரி-ஸ்வாப்பிங் முறையை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதன் மூலம் 500 கி.மீ தூரம் வரை வாகனங்களை இயக்க முடியும்.
இருப்பினும், Tata Motors மற்றும் VE Commercial Vehicles போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில், தனது சொந்த நெட்வொர்க்கிற்கு அப்பால் JSW எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படப் போகிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
