JSW Group நிறுவனம் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகன சந்தையில் கால் தடம் பதிக்கிறது. சத்ரபதி சாம்பாஜிநகரில் **₹2,000 கோடி** முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பிரம்மாண்டமான திட்டம்
JSW Group-ன் துணை நிறுவனமான JSW Greentech இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. சத்ரபதி சாம்பாஜிநகரில் 90 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த ஆலையில், எலக்ட்ரிக் பஸ்கள் மற்றும் டிரக்குகள் தயாரிக்கப்பட உள்ளன. வரும் காலங்களில் ஆண்டுக்கு 1,00,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆரம்பகட்டமாக, ஆண்டுக்கு 15,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட வசதியுடன் இது தொடங்கப்பட உள்ளது.
போட்டியும் சவால்களும்
இந்தத் துறை அதிக முதலீடு தேவைப்படும் (Capital-intensive) ஒரு களமாகும். ஏற்கனவே Tata Motors மற்றும் Ashok Leyland போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், JSW நிறுவனம் இதில் எப்படி தனது இடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
நிறுவனத்தின் உத்தி என்ன?
JSW Group தனது சொந்தத் தேவையையே ஒரு பிசினஸ் வாய்ப்பாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது ஸ்டீல், சிமெண்ட் மற்றும் போர்ட்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் 17,000 டிரக்குகளைப் பயன்படுத்தி வருகிறது. இதில் பெரும் பகுதியை மின்சார வாகனங்களாக மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வெளிச் சந்தையை நம்பியிருக்காமல், ஆரம்பத்திலேயே நிலையான தேவையை உறுதி செய்ய முடியும் என நிறுவனம் நம்புகிறது.
பொருளாதாரக் கணக்கீடு
தற்போதைய சூழலில், ஒரு டீசல் டிரக்கின் விலை ₹25 லட்சம் என்றால், அதே எலக்ட்ரிக் டிரக் ₹85 லட்சம் முதல் ₹88 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவதால், நீண்ட காலத்தில் 15% முதல் 20% வரை இயக்கச் செலவுகளை குறைக்க முடியும் என்பது நிறுவனத்தின் வாதம். இருப்பினும், சார்ஜிங் கட்டமைப்பின் மீதான செலவு மற்றும் வாகனத்தின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே இது லாபகரமானதாக இருக்கும்.
