சாலை போக்குவரத்து அமைச்சகம் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. 2027 முதல் 2029-க்குள் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதால், கார் நிறுவனங்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து, லாப வரம்பில் (Profit Margin) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் (MoRTH) வாகனங்களுக்கான பாதுகாப்பு தரநிலைகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதற்காக 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2027 முதல், புதிய வாகனங்கள் அனைத்தும் முன்பக்க மற்றும் பக்கவாட்டு மோதல் சோதனைகளில் (Crash-test protocols) அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே சந்தையில் உள்ள பழைய மாடல்களுக்கு அக்டோபர் 2028 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு செலவு உயருமா?
இந்த புதிய விதிகளால் வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் இன்ஜினியரிங் பணிகளுக்காக கம்பெனிகள் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் தயாரிப்பு செலவு (Production Cost) கணிசமாக உயரும். இந்த கூடுதல் செலவை நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் குறைத்துக்கொள்ளுமா அல்லது வாகனத்தின் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுமா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான (EV) புதிய சவால்கள்
மின்சார வாகனங்களில் பேட்டரி தீ விபத்துகளைத் தவிர்க்க, ஏப்ரல் 2029-க்குள் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. விபத்தின் போது பேட்டரி பாதுகாப்பாக இருப்பதும், உயர் மின்னழுத்த மின்சுற்றுகள் (High-voltage circuits) தானாகத் துண்டிக்கப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, அக்டோபர் 2028 முதல் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக காரின் முன்பக்க வடிவமைப்பு மாறுகிறது.
அக்டோபர் 2029 முதல், விமானங்களில் இருப்பதை போன்ற 'பிளாக் பாக்ஸ்' (Event Data Recorder - EDR) வசதி கட்டாயமாக்கப்படுகிறது. இது விபத்துகளைப் பற்றிய துல்லியமான தரவுகளைத் தரும்.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, எந்தெந்த நிறுவனங்கள் இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன மற்றும் அவற்றின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திறன் எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதுதான் பங்கின் மதிப்பை தீர்மானிக்கும்.
