லாபத்தில் அழுத்தம்!
தற்போதைய சந்தை நிலவரப்படி, தேவை சீராக இருந்தாலும், சில சவால்கள் இருப்பதாக Hero MotoCorp நிர்வாகம் தெரிவித்துள்ளது. அலுமினியம், ஸ்டீல், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் லாபத்தைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. ஜனவரி-மார்ச் காலாண்டில், ஒரு வாகனத்திற்கான மூலப்பொருள் செலவு சராசரியாக ₹2,100 அதிகரித்துள்ளது. விற்பனை விலையில் சுமார் 2% உயர்த்தப்பட்டாலும், இந்த அதிகரித்த செலவுகளை முழுமையாக ஈடுசெய்ய முடியவில்லை.
எதிர்காலத்திற்கான மாபெரும் முதலீடு
இந்த அழுத்தங்களுக்கு மத்தியிலும், Hero MotoCorp தனது முதலீட்டை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு (FY27) வரை, ₹1,500 கோடிக்கு அதிகமான தொகையை மூலதனச் செலவினங்களுக்கு (Capital Expenditure) ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் அதிக தேவை உள்ள ஸ்கூட்டர் மாடல்களுக்கான உற்பத்தித் திறனை (Manufacturing Capacity) அதிகரிக்க பயன்படுத்தப்படும். மேலும், புதிய EV மாடல்கள், பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் வெளியீடு, கனெக்டட் வெஹிக்கிள் சிஸ்டம்கள், AI கருவிகள், அட்வான்ஸ்டு லோ-எமிஷன் இன்ஜின்கள் (flex-fuel போன்றவை) போன்றவற்றிலும் முதலீடு செய்யப்படும்.
EV உற்பத்தி இரட்டிப்பாகும்!
குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி (Sri City) ஆலையில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்குவதே இந்த முதலீட்டின் முக்கிய நோக்கமாகும். Vida பிராண்டின் கீழ் பல புதிய EV மாடல்களை Hero MotoCorp அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஏற்கெனவே, Destiny ஸ்கூட்டரின் உற்பத்தித் திறனை 50% அதிகரித்துள்ளது. அதேபோல், Zoom பெட்ரோல் ஸ்கூட்டரின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. FY26-ல் EV ஸ்கூட்டர் விற்பனை 2.5 மடங்கு வளர்ந்துள்ளது. இதற்கென, மாதந்திர உற்பத்தித் திறனை 15,000 யூனிட்களில் இருந்து 25,000 யூனிட்களாக உயர்த்தியுள்ளது.
