E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் சொந்தமாக பெட்ரோலை கலப்படம் (Diluting) செய்து வருகின்றனர். இது இன்ஜினுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், வாரண்டி (Warranty) செல்லாததாகிவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஜின் மெக்கானிசம் பாதிப்பு
நவீன வாகனங்களில் உள்ள ECU (Electronic Control Unit) குறிப்பிட்ட எரிபொருள் கலவைக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் தாங்களாகவே பெட்ரோலை நீர்த்துப் போகச் செய்யும் போது, எரிபொருளின் ரசாயனத்தன்மை மாறுகிறது. இது இன்ஜினின் சீரான இயக்கத்தைப் பாதித்து, மிஸ்பயர் (Misfire) மற்றும் எரிபொருள் அமைப்பில் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் ஏற்படும் மெக்கானிக்கல் பாதிப்புகளுக்கு கம்பெனி வாரண்டி வழங்காது.
அன்-வெரிஃபைட் அடிக்டிவ்ஸ் (Unverified Additives)
E20 பயத்தால், சந்தையில் கிடைக்கும் பல்வேறு ரசாயனங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். இவை எவ்வித OEM சான்றிதழும் பெறாதவை. இவை BS-VI மாசுக்கட்டுப்பாட்டு கருவிகளை சிதைப்பதுடன், ஃபியூயல் இன்ஜெக்டர்கள் மற்றும் இன்டர்னல் சீல்களை (Internal Seals) பழுதடையச் செய்கின்றன. இதனால் பழுதுபார்ப்புச் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது.
வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு
வாகனங்களை நீண்ட காலம் நிறுத்தி வைக்கும்போது, எத்தனால் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் (Hygroscopic), பெட்ரோல் டேங்கில் தண்ணீர் சேர வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, எரிபொருள் அளவை எப்போதும் 60%-க்கு குறையாமல் பராமரிப்பதே சிறந்த வழி. பெட்ரோலில் நீங்களாக எதையும் கலக்காமல், ஏதேனும் சந்தேகம் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் பரிசோதனை செய்வது மட்டுமே உங்கள் வாகனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
