நிறுவனம் வெளியிட்ட Q4 அறிக்கையின்படி, நிகர லாபம் ₹300 கோடி ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹369 கோடி ஆக இருந்தது.
இருப்பினும், நிறுவனத்தின் வருவாய் 6.6% அதிகரித்து ₹2,932.8 கோடி எட்டியுள்ளது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனை கழிக்கும் முன் கிடைக்கும் லாபம் (EBITDA) 4.3% உயர்ந்து ₹640 கோடியாக பதிவானாலும், EBITDA மார்ஜின் 21.8% ஆக சற்று குறைந்துள்ளது.
OHT பிரிவு வலுவாக உள்ளது
நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 91% பங்களிக்கும் ஆஃப்-ஹைவே டயர் (OHT) பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த காலாண்டில் OHT வால்யூம்கள் 5% உயர்ந்து 85,820 மெட்ரிக் டன் ஆக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட மீட்சி, அமெரிக்காவில் அதிகரித்த வர்த்தகம் மற்றும் இந்தியாவில் தொடர்ந்து காணப்படும் பலம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திற்கான மாபெரும் வளர்ச்சித் திட்டங்கள்
அடுத்தகட்ட வளர்ச்சிக்காக Balkrishna Industries பெரும் முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 இல் அறிவிக்கப்பட்ட OHT டயர்களுக்கான ₹1,300 கோடி முதலீடு, மே 2025 இல் அறிவிக்கப்பட்ட ஆன்-ஹைவே டயர்கள், ரப்பர் டிராக்குகள், கார்பன் பிளாக் மற்றும் பவர் பிளாண்ட் திட்டங்களுக்கான ₹3,500 கோடி முதலீடு ஆகியவற்றுடன், மேலும் ₹2,000 கோடி திறன் விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆன்-ஹைவே டயர் பிரிவில் AI ஆட்டோமேஷன் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிவிடெண்ட் அறிவிப்பு மற்றும் சந்தை தாக்கம்
இவற்றோடு, ஒரு பங்குக்கு ₹4 இறுதி டிவிடெண்ட் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, Balkrishna Industries ஷேர் விலை பெரியளவில் மாறாமல், BSE-ல் 0.18% உயர்ந்து ₹2,263.25 ஆக வர்த்தகமானது.
