முன்னாள் NITI Aayog சிஇஓ அமிதாப் காந்த், புதிய CAFE III எரிபொருள் சிக்கன விதிகளை விமர்சித்துள்ளார். இதில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (EV) பதில் ஹைப்ரிட் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது, நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களை பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் NITI Aayog சிஇஓ அமிதாப் காந்த், மத்திய அரசின் சமீபத்திய CAFE III (Corporate Average Fuel Economy) விதிகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்த இந்த விதிமுறைகள் தடையாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். மத்திய எரிசக்தி அமைச்சகம் இந்த விதிகள் அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதாகக் கூறினாலும், இது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான (EV) தேவையை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்பது அமிதாப் காந்தின் வாதம்.
CAFE III விதிகள் என்ன சொல்கின்றன?
இந்த விதிகள் ஒரு கம்பெனியின் மொத்த வாகன உற்பத்தியின் சராசரி எரிபொருள் திறனை அடிப்படையாகக் கொண்டவை. இதில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டாலும், அதே சமயம் Plug-in Hybrids, Strong Hybrids மற்றும் Ethanol வாகனங்களுக்கும் கிரெடிட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் நிறுவனங்கள் கட்டாயமாக பேட்டரி வாகனங்களுக்கு மாற வேண்டிய அவசியமில்லாமல், பல்வேறு தொழில்நுட்பங்களை கலந்து பயன்படுத்தி தங்கள் இலக்குகளை அடைய முடிகிறது.
ஆட்டோ கம்பெனிகளின் நிலை என்ன?
இந்த கொள்கை முடிவு முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய விவாதமாகியுள்ளது. Tata Motors மற்றும் Mahindra & Mahindra ஆகிய நிறுவனங்கள் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பிளாட்பாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், Maruti Suzuki மற்றும் Toyota போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்துள்ளன. தற்போதைய அரசு கொள்கை, ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை ஆதரிப்பதால், பெரிய அளவிலான கேபிடல் செலவுகளை (Capital Expenditure) செய்யாமல், தற்போதைய இலக்குகளை அடைய இந்த நிறுவனங்களுக்கு எளிதாகிறது.
நிர்வாகத்தில் சிக்கல்?
இந்த விதிகளின் கீழ், இலக்கை அடையத் தவறும் நிறுவனங்கள், கூடுதல் கிரெடிட் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து கிரெடிட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்த சந்தையை முறைப்படுத்தும் Bureau of Energy Efficiency-ல் நிர்வாக ரீதியான மோதல்கள் (Conflict of Interest) ஏற்பட வாய்ப்புள்ளதாக அமிதாப் காந்த் எச்சரித்துள்ளார். இது எதிர்காலத்தில் நிறுவனங்களின் இணக்கச் செலவுகளை (Compliance Costs) அதிகரிக்கக்கூடும்.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, அரசு இந்த கொள்கையில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதுதான் முக்கிய கவனிப்பு. எதிர்காலத்தில் EV-களுக்கு மட்டும் தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சந்தைப் போட்டியை முழுமையாக மாற்றி அமைக்கும்.
