டெஸ்லா ஹைதராபாத்தில் புதிய ஷோரூம் & சர்வீஸ் சென்டர்!
மின்சார வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெஸ்லா நிறுவனம், இந்தியாவின் ஹைதராபாத்தில் தங்களது அடுத்த ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரை அமைக்கவுள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, டெஸ்லா இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள், தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபுவை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இந்திய சந்தையில் தங்கள் இருப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தை டெஸ்லா உறுதிப்படுத்தியது. ஹைதராபாத்தின் வலுவான மின்சார வாகன சூழல், குறைக்கடத்தி வடிவமைப்பு (Semiconductor Design), ஆட்டோமோட்டிவ் மென்பொருள், மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான உகந்த இடம் என்பதை மாநில அரசு சுட்டிக்காட்டியது.
டெஸ்லா இந்தியா பொது மேலாளர் ஷரத் அகர்வால் மற்றும் பொது கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் ரஜத் ஆகியோரை அமைச்சர் பாபு வாழ்த்தினார். இந்தியாவில் ஏற்கனவே நான்கு ஷோரூம்களை திறந்திருக்கும் டெஸ்லா, தங்களது அடுத்த விரிவாக்கத்திற்கு ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தெலுங்கானாவில் உள்ள தொடர்புடைய பிற தொழில் வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுமாறு டெஸ்லாவுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். தொழில்நுட்பம் மற்றும் தொழில் முதலீடுகளுக்கு மாநில அரசு முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
