இறக்குமதி வரி குறைப்பால் என்ன பாதிப்பு?
இந்தியா-அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம், ஜம்மு காஷ்மீரின் தோட்டக்கலைத் துறையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் மற்றும் குறிப்பாக வால்நட், பாதாம் போன்ற பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் மலிவான பழங்கள் மற்றும் நட்ஸ், காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச ஆப்பிள்களுக்கு பெரும் போட்டியாக அமையும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
காஷ்மீர் பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பஷீர் அகமது பஷீர், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியதாவது, "ஏற்கனவே உள்ளீடு செலவுகள் அதிகரிப்பு, சீரற்ற வானிலை, பூச்சித் தாக்குதல்கள் போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிக்குறைப்பு, ஏற்கனவே நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்கு இது ஒரு "இறுதி ஆணியாக" அமையும்" என தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் தோட்டக்கலைத் துறையைப் பாதுகாக்க, வெளிநாட்டு ஆப்பிள்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசியல் தலைவர்களின் கண்டனம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வால்நட் மற்றும் பாதாம் போன்ற இப்பகுதிக்கே உரிய பொருட்களின் மீது இறக்குமதி வரி இல்லாதது, உள்ளூர் விவசாயிகளின் நலனை அரசு பாதுகாக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும், ஆப்பிள்களுக்கும் இதே போன்ற பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான பிடிபி (PDP) கூட, அமெரிக்க விவசாய மற்றும் தோட்டக்கலை இறக்குமதிகளுக்கு வரி விதிக்கப்படாவிட்டால், யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரம் "அழிவை" சந்திக்கும் என எச்சரித்துள்ளது.
மாற்று கருத்துக்கள்
இந்த கவலைகளுக்கு மத்தியிலும், ஒரு சிறு குழுவினர் இந்த ஒப்பந்தத்தில் சில நன்மைகள் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஷோபியான் பகுதியைச் சேர்ந்த வால்நட் விவசாயி ஜாவீத் அகமது லோன் கூறுகையில், "அமெரிக்காவில் இருந்து வரும் போட்டி, உள்ளூர் விலைகளை சீராக்கவும், தரத்தை மேம்படுத்தவும் உதவும். ஏற்கனவே போட்டித்தன்மையுடன் உள்ள வெளிநாட்டு நட்ஸ், உள்ளூர் விவசாயிகளை தங்கள் தரத்தை உயர்த்த ஊக்குவிக்கும். இது நீண்ட கால அடிப்படையில் நுகர்வோருக்கு நன்மை பயக்கும்" என நம்புகிறார்.