மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அக்ரி-டெக் மற்றும் நிலையான விவசாய உள்கட்டமைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இடைத்தரகர்களை நீக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த இந்த புதிய கொள்கை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய விவசாயத்தின் போக்கை மாற்றியமைக்க, தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வெறும் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், அக்ரி-டெக் உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் நிலையான விவசாய முறைகளில் நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு.
அரசின் புதிய உத்தி
அறிவியல் ஆய்வகங்களில் கண்டறியப்படும் தொழில்நுட்பங்களை நேரடியாக வயல்வெளிகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் தனியார் துறைக்கு இடையேயான கூட்டணியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் CSR நிதியைப் பயன்படுத்தி, காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் சத்துணவு மேலாண்மைக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உர நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
ரசாயன உரங்களின் பயன்பாட்டை பெருமளவு குறைத்து, இயற்கை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாய முறைகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது ரசாயன உரங்களைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து மலிவான விலை இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளைச் சிறு விவசாயிகளுக்குக் கொண்டு வரவும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
விவசாயப் பொருட்களின் உற்பத்தி விலைக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க அரசு முனைப்பு காட்டுகிறது. இடைத்தரகர்களை நீக்கி, நேரடியாகச் சந்தையை அணுகும் Value Chain முறையை உருவாக்குவதன் மூலம், விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
எனவே, இனிவரும் காலங்களில் 'ப்ரிசிஷன் ஃபார்மிங்' (Precision Farming), இயற்கை உரங்கள் மற்றும் டிஜிட்டல் சப்ளை செயின் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், பழைய முறையிலான உர விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
