Q4 FY26-ல் Zen Technologies-ன் நிதிநிலை அறிக்கைகள் முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.
நிகர லாபம் (Net Profit) கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 69% குறைந்து ₹31.53 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இது ₹101.04 கோடியாக இருந்தது. வருவாயும் (Revenue) 42.5% சரிந்து ₹200.78 கோடியாக மாறியுள்ளது (முந்தைய ஆண்டு ₹349.74 கோடி). EBITDA-வும் ₹162.74 கோடியிலிருந்து ₹73.69 கோடியாக குறைந்துள்ளது.
இந்த நிதிநிலை சரிவுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனம் மேற்கொண்டுள்ள 'டிஃபென்ஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன்' (Defense Transformation) எனப்படும் பாதுகாப்புத் துறைக்கான மாற்றங்கள் காரணம் என கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனிமேல் பயிற்சி சிமுலேஷன் (Training Simulation), எதிர்-ட்ரோன் தீர்வுகள் (Counter-Drone Solutions), தானியங்கி ஆயுத நிலையங்கள் (Automated Weapons Stations), போர் ரோபோட்டிக்ஸ் (Combat Robotics) போன்ற பல துறைகளில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியுள்ளது.
எனினும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் Zen Technologies தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2026 நிலவரப்படி, கம்பெனியின் ஆர்டர் புக் (Order Book) ₹1,336.04 கோடியாக வலுவாக உள்ளது. மேலும், நவீன போர் தேவைகளுக்கான புதிய தயாரிப்புகளும் உள்ளதால், FY27-ல் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்க்கலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. Zen Technologies, ஹைட்ராபாத்தில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளதுடன், 200-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் (Patents) பெற்றுள்ளது.
