Boeing நிறுவனத்தின் 737 MAX விமானங்களில் சாப்ட்வேர் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய விமானங்களான Air India Express மற்றும் Akasa Air ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் விரிவாக்க திட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.
என்ன பிரச்சனை?
Boeing 737 MAX விமானங்களின் ஃபிளைட் மேனேஜ்மென்ட் கம்ப்யூட்டரில் ஒரு தொழில்நுட்ப குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் தரையிறங்கும் சமயத்தில் (Landing sequence), இந்த கோளாறு காரணமாக விமானம் தானியங்கி நிலையிலிருந்து (Vertical navigation mode) சாதாரண நிலைக்கு மாறுகிறது. இதனால் விமானிகள் மேனுவலாக விமானத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, தற்காலிக வழிமுறைகளை Boeing வழங்கியுள்ளது, அதே சமயம் நிரந்தர சாப்ட்வேர் பேட்ச் (Software patch) தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான Air India Express மற்றும் Akasa Air ஆகிய இரண்டும் இணைந்து தற்போது 96 Boeing 737 MAX விமானங்களை இயக்கி வருகின்றன. Akasa Air தற்போது தங்களது செயல்பாடுகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், Boeing நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
விரிவாக்க திட்டங்களுக்கு சிக்கலா?
இந்திய விமான நிறுவனங்கள் Boeing நிறுவனத்திடம் சுமார் 505 புதிய விமானங்களுக்கான ஆர்டர்களைக் கொடுத்துள்ளன. இதில் 737 MAX மட்டுமின்றி, 777X மற்றும் 787-9 மாடல்களும் அடங்கும். ஏற்கனவே Boeing நிறுவனம் மாதத்திற்கு 47 விமானங்களை தயாரிக்கும் இலக்கை அடைவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய சாப்ட்வேர் சிக்கல் மற்றும் உற்பத்தி பாதிப்புகள், இந்திய நிறுவனங்களின் எதிர்கால விரிவாக்க திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
