பிராந்திய விமான நிறுவனமான Fly91, **40** புதிய ATR 72-600 ரக விமானங்களை வாங்க சுமார் **$1 பில்லியன்** மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஆர்டர் இந்தியாவிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்குமா?
இந்தியாவின் வளர்ந்து வரும் பிராந்திய விமான நிறுவனமான Fly91, சமீபத்தில் 40 ATR 72-600 ரக விமானங்களை வாங்க உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுமார் $1 பில்லியன் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், சமீப காலங்களில் இந்திய சந்தையில் பிராந்திய விமானங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும்.
இந்தியாவில் விமான தயாரிப்பு?
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ATR நிறுவனம் இந்தியாவில் விமானங்களுக்கான அசெம்பிளி லைன் (Assembly Line) அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை என்றாலும், இது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல.
ATR நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 30 முதல் 60 விமானங்கள் வரை மட்டுமே உலகளவில் தயாரிக்கிறது. ஒரு புதிய உற்பத்தி ஆலை அமைக்க வேண்டுமென்றால், இந்திய சந்தையில் மட்டும் குறைந்தது 200 முதல் 300 விமானங்கள் தேவைப்படும் என நிறுவனம் கறாராகத் தெரிவித்துள்ளது. Fly91 அளித்த இந்த ஆர்டர் ஒரு தொடக்கமாக இருந்தாலும், மற்ற ஏர்லைன்களிடமிருந்து அதிகப்படியான ஆர்டர்கள் கிடைத்தால் மட்டுமே இந்தத் திட்டம் சாத்தியப்படும்.
சவால்கள் என்ன?
இந்திய பிராந்திய விமான போக்குவரத்துத் துறை எப்போதும் அதிக ரிஸ்க்கும், அதிக முதலீடும் கொண்டதாகவே இருந்து வருகிறது. SpiceJet மற்றும் Alliance Air போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே நிதி நெருக்கடி மற்றும் பராமரிப்பு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இந்தத் துறை லாபகரமாக மாறினால் மட்டுமே, அடுத்தகட்டமாக உற்பத்தி ஆலைகள் அமைக்க முன்வருவார்கள்.
ஏற்கனவே Embraer நிறுவனம் Adani Group உடன் இணைந்து இத்தகைய திட்டங்களை ஆராய்ந்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, இந்தியா வெறும் சந்தையாக மட்டுமில்லாமல், உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் MRO (Maintenance, Repair, and Overhaul) சேவைகளுக்கான முக்கிய மையமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
