HDFC Bank-ன் அடுத்த MD மற்றும் CEO-வாக அனுப் பக்ஷி (Anup Bagchi) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 27, 2026 முதல் இவர் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை மாற்றம்
தற்போதைய MD மற்றும் CEO சசிதர் ஜகதீசன் (Sashidhar Jagdishan) அக்டோபர் 26, 2026-ல் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27, 2026 முதல் அனுப் பக்ஷி புதிய பொறுப்பை ஏற்பார் என ரிசர்வ் வங்கி (RBI) அனுமதியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
அனுப் பக்ஷிக்கான ஊதியக் கட்டமைப்பு, வங்கி நிர்வாகத்தின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ₹8.97 கோடி நிலையான சம்பளமாகவும், ₹26.92 கோடி வரை செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகையாகவும் (Variable pay) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த ஊக்கத்தொகையில் 33% பணமாகவும், மீதமுள்ள 67% பங்குகள் தொடர்பான திட்டங்களாகவும் (Share-linked instruments) வழங்கப்படவுள்ளது. இது CEO-வின் நலனை முதலீட்டாளர்களின் நலனுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ₹3.19 கோடி மதிப்புள்ள RSUs மற்றும் ₹4.16 கோடி மதிப்புள்ள ESOPs ஆகியவையும் வழங்கப்படவுள்ளது.
பங்குதாரர்களின் பங்கு
இந்த ஊதிய முறைக்கு பங்குதாரர்களின் அனுமதி தேவைப்படுவதால், தபால் வாக்குப்பதிவு (Postal Ballot) முறை தொடங்கப்படுகிறது. தகுதியுள்ள பங்குதாரர்கள் அக்டோபர் 8, 2026 முதல் நவம்பர் 6, 2026 வரை தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
